யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக இணுவிலில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று பொலுசாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்றபோது வீடொன்றில் இயங்கி வந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நேற்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டது.
குறித்த நிலையம் இரசாயான ஆய்வு கூடத்தை போன்று வடிவமைக்கப்பட்டு இரசாயனங்களை பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்றதாக நேரில் சென்று பார்வையிட்ட சட்ட வைத்திய அதிகாரி இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
வாள்வெட்டு கும்பலொன்றில் இயங்கும் ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே குறித்த நிலையம் இயங்கியுள்ளதுடன் பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் ஆய்வுகூடத்தில் பிரதான குற்றவாளிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருள் உற்பத்தி நிலையம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து வந்து விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.