தெலுங்கு மற்றும் தமிழில் வில்லன் நடிகராக மிரட்டிய கோட்டா சீனிவாச ராவ், ஆந்திரா மாநிலத்தில் நடந்த தேர்தலுக்கு ஓட்டுப்போட வந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் 1942-ஆம் ஆண்டு பிறந்தவர் கோட்டா சீனிவாச ராவ். இவரின் தந்தை சீதா ராம ஆஞ்சநேயுலு ஒரு மருத்துவர். எனவே தன்னுடைய மகனும் ஒரு மருத்துவராக வேண்டும் என விரும்பினார். ஆனால் நடிப்பின் மீது இவருக்கு இருந்த தீரா காதல் இவரை ஒரு நடிகராக மாற்றியது. கல்லூரியில் பல்வேறு நாடகங்களில் நடித்து சக மாணவர்களின் பாராட்டுகளையும், ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்ற கோட்டா சீனிவாச ராவ், அறிவியலில் தன்னுடைய இளங்கலை பட்டத்தை பெற்ற பின்னர், குடும்பத்தினர் ஆசைக்காக ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றினார்.
ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார் (2 மகள்கள் மற்றும் ஒரு மகன்). நடிப்பு, பாடல், அரசியல் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருந்த கோட்டா சீனிவாச ராவை, சோகத்தில் மூழ்கடித்தது அவருடைய ஒரே மகனின் திடீர் மறைவு.
கடந்த 2010-ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் நடந்த சாலை விபத்தில் கோட்டா சீனிவாச ராவின் மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் உயிரிழந்தார். பிரசாத் ஜே.டி. சக்கரவர்த்தியின் சித்தம் படத்திலும், காயம் 2 என்கிற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகனின் மரணத்திற்கு பின்னர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து கொண்ட கோட்ட சீனிவாச ராவ்… கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் மாசி படத்தின் மூலம் அறிமுகமாகி சகுனி, தாண்டவம், கிருஷ்ண லீலை, ரத்த சரித்திரம் போன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் திருப்பாச்சி படத்தில் இவரின் ‘சனியன் சகடை’ கதாபாத்திரமும், விக்ரமின் சாமி படத்தில் இடம்பெற்ற ‘பெருமாள் பிச்சை’ கதாபாத்திரமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிக்க கோட்டா சீனிவாச ராவ், தன்னுடைய உதவியாளருடன் வந்திருந்தார். 81 வயதில் தனியாக நடக்க கூட முடியாமல் இவர் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. “பல படங்களில் வில்லனாக ரசிகர்களை மிரட்டிய உங்களுக்கா இந்நிலை?!” என இரசிகர்கள் தங்களின் மனவருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.